
மெக்சிகோ, டிசம்பர் 18 – மெக்சிகோவிலுள்ள காற்பந்து மைதானம் ஒன்றில் தனியார் ஜெட் விமானம் விழுந்து நொறுங்கியதில், மூன்று குழந்தைகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
‘Emergency Landing’ அதாவது அவசர தரையிறக்கத்தின்போது அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து, மைதானத்திற்கு அருகாமையிலிருந்த தொழில்துறை கிடங்கொன்றில் மோதி விபத்துகுள்ளானது.
விமானத்தில் எட்டு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் இருந்தனர். உயிரிழந்த குழந்தைகள் 2, 4 மற்றும் 9 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விமான விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ மற்றும் எரிபொருள் கசிவு காரணமாக, அருகிலுள்ள பகுதிகளில் வசித்து வந்த சுமார் 130 பேர் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
சம்பவ நேரத்தில் தொழிற்சாலை செயல்பாட்டில் இல்லாததால், அங்குள்ள பணியாளர்கள் யாரும் காயமடையவில்லை என்றும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.



