
கோலாலம்பூர், செப் 4 – சுல்தான் நஸ்ரின் ஷாவை உட்படுத்திய பாதுகாப்பு மீறல் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட பொய்யான மற்றும் இனரீதியிலான குற்றச்சாட்டு தொடர்பாக மேலும் மூவரிடம் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையமான (MCMC) வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது.
கெடாவில் Kuala Nerang போலீஸ் நிலையம், குவந்தானில் Beserah
போலீஸ் நிலையம் மற்றும் பினாங்கில் வடகிழக்கு மாவட்ட போலீஸ் நிலையத்தில் அந்த மூன்று நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பாஸ் கட்சியின் Manjoi சட்டமன்ற உறுப்பினர் Hafez Sabri யிடம் செவ்வாக்கிழமை MCMC வாக்குமூலத்தை பதிவு செய்தது.
முகநூல் மற்றும் டிக்டோக்கில் உள்ள பதிவுகள் இன பதற்றத்தைத் தூண்டும் மற்றும் சமூகத்திற்குள் எதிர்மறையான கருத்துக்களை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டிருந்ததாக MCMC வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று பேராக் மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது மேடையில் சுல்தான் நஸ்ரினை நோக்கி விரைந்த பெண், சீனர் என்று அந்தப் பதிவுகள் பொய்யான தகவலை வெளியிட்டன.
சமூக ஊடகங்களில் உள்ளடக்கத்தை பதிவேற்றுவது அல்லது பகிர்வதற்கு முன்பு எப்போதும் தகவலின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும்படி பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுகிறது என்று MCMC வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட 41 வயது பெண்ணுக்கு எதிரான தடுத்து வைக்கும் உத்தரவு காலாவதியானதை தொடர்ந்து, அப்பெண்ணின் மனநிலையை கண்காணிப்பதற்காக தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள Bahagia Ulu Kinta மருத்துவமனையிடம் தொடர்பு கொள்ளப்பட்டதாக பேராக் போலீஸ் தலைவர் நூர் ஹிசாம் நோர்டின் ( Noor Hisaham Nordin ) தெரிவித்தார்.
அப்பெண் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்வதா , வேண்டாமா என்பது குறித்து சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் உத்தரவுக்காக போலீசார் இன்னும் காத்திருப்பதாக அவர் கூறினார்.