பாலியல் குற்றவாளியுடன் தொடர்பு; தம்பி அண்ட்ரூவின் அரசப் பட்டங்களையும் Windsor மாளிகையையும் பறிக்க மன்னர் சார்ல்ல் ஆணை

லண்டன், அக்டோபர்-31,
பிரிட்டன் அரச குடும்பத்தின் அடுத்த அதிரடியாக, தனது தம்பி இளவரசர் அண்ட்ரூவின் அனைத்து அரசப் பட்டங்களைப் பறிக்கவும், அவர் நீண்ட காலமாக வசித்து வரும் வின்ட்சர் (Windsor) மாளிகையிலிருந்து வெளியேற்றவும் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் ஆணையிட்டுள்ளார்.
அரசப் பட்டம் பறிக்கப்பட்டதால், அவர் இனி ‘அண்ட்ரூ மவுன்பெட்டன் வின்ட்சர்’ என மட்டுமே அழைக்கப்படுவார் என பக்கிங்ஹம் அரண்மனை அறிவித்துள்ளது.
இதையடுத்து வின்ட்சர் மாளிகையிலிருந்து சீக்கிரமே வெளியேற அண்ட்ரூவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
வெளியில் தனிப்பட்ட குடியிருப்புக்கு மாறியதும், அதன் செலவுகளை அரண்மனை ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அண்ட்ரூவைச் சுற்றிய பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffery Epstein) என்ற அமெரிக்கக் குழந்தை பாலியல் குற்றவாளியுடன் இருந்த தொடர்பு பற்றிய சர்ச்சைகள் மீண்டும் எழுந்துள்ளதால், அவர் மீது இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மறைந்த அரசியார் இரண்டாம் எலிசபெத் – எடின்பர்க் கோமகன் ஃபிலிப் தம்பதியரின் 4 பிள்ளைகளின் மூன்றாவதான அண்ட்ரூ, தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்து வருகிறார்.
அரசியார் உயிரோடு இருந்தபோதே, இதே போன்ற பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி அவ்வப்போது அரண்மனையால் அவர் தள்ளி வைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



