Latestமலேசியா

போதைப்பொருள் சேமிப்புக் கிடங்காக மாற்றப்பட்ட சொகுசு அடுக்குமாடி வீடுகள்; சுமார் 1 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் பறிமுதல்

கோத்தா கினாபாலு, ஜூலை-11 – சபா, கோத்தா கினாபாலுவில் 2 சொகுசு அடுக்குமாடி வீடுகளை போதைப்பொருள் சேமிப்பு மற்றும் விநியோக மையங்களாகப் பயன்படுத்தும் முயற்சி, போலீஸாரின் அதிரடிச் சோதனையில் முறியடிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 1 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

23 வயது உள்ளூர்வாசியான சந்தேக நபர், போலீஸாரின் கண்களில் சிக்குவதைத் தவிர்ப்பதற்காக, மாதத்திற்கு ஆயிரக்கணக்கான ரிங்கிட்டுகளுக்கு அவ்வீடுகளை வாடகைக்கு எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு பூட்டிய Toyota Hilux Yaris வாகனத்தில் போலீசார் சுமார் 960,000 ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

அதில் 12.7 கிலோ கிராம் ஷாபு, 6.9 கிலோ கெட்டமைன் மற்றும் எக்ஸ்தசி வகைப் போதைப்பொருட்களும் அடங்கும்.

மேலும், Toyota Hilux உள்ளிட்ட இரண்டு சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதில், கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 1.23 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்தது.

விசாரணையில், இந்த கும்பல் போதைப்பொருட்களை சபாவுக்கு விமானம் மூலம் கொண்டுச் சென்று பிறகு அண்டை நாடுகளுக்கு கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

பிடிக்கப்பட்ட நபருக்கு முன் குற்றப் பதிவு எதுவும் இல்லை; அவர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு 1952-ஆம் ஆண்டு போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!