
வாஷிங்டன், ஜனவரி-13-கொஞ்ச நாட்களாக அமைதியாக இருந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் புதிய வரி நடவடிக்கையை அறிவித்துள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் இந்த உத்தரவு, ஈரானுடன் வாணிபம் செய்யும் எந்த நாட்டின் இறக்குமதிகளுக்கும் 25% வரியை விதிக்கிறது.
“இந்த உத்தரவு இறுதியானது, தீர்க்கமானது” என்றார் அவர்.
ஈரானின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியான சீனா, ஈராக், ஐக்கிய அரபு சிற்றரசு, துருக்கி, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளுக்கு அழுத்தம் தரும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
இப்புதிய வரி, ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மூன்றாவது வாரமாக நீடிக்கும் நிலையில், “போராட்டக்காரர்களை கொன்றால் தெஹ்ரானுக்கு இராணுவத்தை அனுப்புவேன்” என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த சில நாட்களில் வந்துள்ளது.
அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அடிபணியப் போவதில்லை என ஈரான் சவால் விட்ட நிலையில், அந்த மத்தியக் கிழக்கு நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் ட்ரம்ப் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
என்றாலும், வெள்ளை மாளிகை இந்த வரி விவரங்களை இன்னும் தெளிவுபடுத்தவில்லை.
இதனால் அமுலாக்கம் குறித்து வணிகங்கள் நிச்சயமற்ற நிலையில் உள்ளன.
ட்ரம்பின் இந்நடவடிக்கை உலகளாவிய வர்த்தக பதற்றத்தை தூண்டி, அமெரிக்காவில் விலைகளை உயர்த்தும் அபாயம் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
நிலவரங்களை உலக சந்தைகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
.



