
கோலாலம்பூர், டிச 16 – Setiawangsa – Pantai நெடுஞ்சாலையின் 18 ஆவது கிலோமிட்டரில் வங்சா மாஜூ டோல் சாவடிக்கு அருகே Mercedes Bens 450 ரக கார் ஓடிக் கொண்டிருந்தபோது தீப்பிடித்ததில் அதன் ஓட்டுநர் உயிர் தப்பினார். நேற்று நண்பகல் மணி 1.38 அளவில் இது குறித்து கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தகவலை பெற்றதைச் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு ஏழு தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.
அக்காரின் இயந்திர பகுதியில் ஏற்பட்ட தீ நண்பகல் மணி 2.15 அளவில் முற்றாக அணைக்கப்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை மையத்தின் கமாண்டர் நோர் சைபுல் இப்ராஹிம் ( Nor Saiful Ibrahim ) தெரிவித்தார். அந்த கார் 100 விழுக்காடு சேதம் அடைந்த போதிலும் அந்த தீவிபத்தில் எவரும் எந்தவொரு பாதிப்புக்கும் உள்ளாகவில்லை. அந்த தீவிபத்திற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.