
கோலாலம்பூர், ஆகஸ்ட்-18- இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் கீழ் சில புதிய முன்னெடுப்புகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை மக்களவையில் அறிவிக்கின்றார்.
மேலும் வியூகத்துவம் வாய்ந்த மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளை அவைக் கொண்டிருக்கும் என, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இப்புதிய முயற்சி இந்தியச் சமூகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அவர்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதையும் நாட்டின் வளர்ச்சியிலிருந்து பயனடைவதையும் உறுதிச் செய்யுமென ரமணன் சொன்னார்.
அனைவரையும் அரவணைத்து, முற்போக்கான மற்றும் தாக்க அடிப்படையிலான அணுகுமுறையின் மூலம் நாட்டின் வளர்ச்சியில் ஒரு பங்காளியாக இந்தியச் சமூகத்தின் பங்கையும் உயர்த்துவதற்கான மடானி அரசாங்கத்தின் கடப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.
மக்களவையில் 13-ஆவது மலேசியத் திட்டத்தின் விவாதங்களின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்று பதிலளித்து பேசுகையில் ரமணன் அவ்வாறு கூறினார்.
இவ்வேளையில் மித்ராவை மறுசீரமைக்கும் பரிந்துரைகளையும் அரசாங்கம் ஆழமாக பரிசீலிக்கும்.
அதே சமயம், இந்தியச் சமுதாயம் மீதான சிறப்பு அமைச்சரவை செயற்குழுவை அமைக்கும் பரிந்துரையும் ஆராயப்படும் என, மடானி அரசாங்கத்தில் இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பொறுப்பேற்றுள்ளவருமான ரமணன் கூறினார்.
இதனிடையே 2023, 2024-ஆம் ஆண்டுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை மித்ரா பயன்படுத்தத் தவறியுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் துணையமைச்சர் மறுத்தார்.
மாறாக, அவ்விரு ஆண்டுகளில் மித்ரா திட்டங்கள் வாயிலாக 256, 592 இந்தியர்கள் பயனடைந்துள்ளதாக அவர் சொன்னார்.
மித்ராவை மடானி அரசாங்கம் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டதிலிருந்து 2023-ஆம் ஆண்டு முதல் சுமார் 100 மில்லியன் ரிங்கிட் நிதியில் 230-க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எனவே மித்ரா தோல்வியுற்றது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.