
வாஷிங்டன், செப்டம்பர்-6 – ‘இருண்ட சீனாவுக்குள்’ இந்தியாவையும் ரஷ்யாவையும் இழந்து விட்டோம் என, அமெரிக்கா அதிபர் டோனல்ட் ட்ரம்ப் புலம்பியுள்ளார்.
பரவாயில்லை, அம்மூன்று நாடுகளும் ‘வளமாக’ வாழட்டும் என வஞ்சகமாக அவர் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
ஷங் ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் அண்மைய உச்ச நிலை மாநாட்டின் போது, இந்தியாவும் ரஷ்யாவும் சீனாவுடன் ஒட்டி உறவாடின.
போதாக் குறைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கும் அதிபர் விளாடிமிர் புட்டினுக்கும் சீன அதிபர் சீ சின் பிங் ‘ராஜ உபசரிப்பு’ வழங்கியப் புகைப்படங்களும் வீடியோக்களும் உலகம் முழுவதும் வைரலாகின.
அதிகப்படியான வரி விதிப்பின் மூலம் உலக நாடுகளை தன் கண்ணசைவில் வைத்திருப்பதாகக் காட்டிக் கொள்ள விரும்பிய அமெரிக்காவுக்கு இது பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.
இதைத் தாங்க முடியாமல் தொடர்ந்து தனது Truth Social சமூக ஊடகத்தில் ட்ரம்ப் கருத்து பதிவிட்டு வருகிறார்.
அந்த வரிசையில், உலக வல்லரசாக சீனா விஷ்வரூபம் எடுத்திருப்பதை எண்ணி கடும் விரக்தியடைந்தவராய் இப்புதியப் பதிவில் தனது ஆதங்கத்தை ட்ரம்ப் கொட்டியுள்ளார்.
வரியை ஆயுதமாகக் கையிலெடுக்க வாஷிங்டன் முற்பட்டதால், தேவையில்லாமல் ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் முன்பை விட நெருங்கி பழக தாமே காரணமாகி விட்டதை எண்ணி ட்ரம்ப் புலம்புவதே இதன் மூலம் வெளிப்படுவதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
சமூக ஊடகத்தில் புலம்பினாலும், இந்தியா ரஷ்யா சீனா மூன்றையும் ‘அடக்கி’ வைக்க விரைவிலேயே அடுத்தத் திட்டத்தை ட்ரம்ப் கையிலெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.