
கோலாலம்பூர், மார்ச்-12 – இந்து மதத்தை இழிவுப்படுத்தியதன் பேரில் இஸ்லாமிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மீது மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பில், தேசிய சட்டத் துறை அலுவலகத்தின் உத்தரவுக்காக போலீஸ் காத்திருக்கிறது.
தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் அவ்வாறு கூறியுள்ளார்.
சம்ரி வினோத்துக்கு எதிராக இதுவரை நாடு முழுவதும் 894 புகார்கள் பெறப்பட்டுள்ளன என்றார் அவர்.
சம்ரி வினோத்தின் வாக்குமூலமும் பதிவுச் செய்யப்பட்டு, விசாரணை அறிக்கை சட்டத் துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.
அது இன்னமும் அவ்வலுவலகத்தின் ஆய்வில் உள்ளது என்றார் அவர்.
தைப்பூசக் காவடியாட்டை பேயாட்டத்துடனும் கள் குடிப்பவர்களுடனும் தொடர்புப்படுத்திய பேசி சம்ரி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில், ‘வேல் வேல்’ வீடியோ சர்ச்சை தொடர்பில் ஏரா எஃ.எம் வானொலியின் 3 அறிவிப்பாளர்கள் மீதான விசாரணை அறிக்கையும் சட்டத் துறை அலுவலகத்தின் பரிசீலனையில் உள்ளது.
அதன் தொடர்பிலும் இன்னும் உத்தரவு வரவில்லை என்றார் அவர்.