
கோலாலம்பூர், பிப்ரவரி-15 – மலாக்காவில் மோசடி கும்பல்களால் அடிக்கடி பாதிக்கப்படும் பொதுச் சேவை ஊழியர்களில் ஆசிரியர்களும் அடங்குவர் என தெரிய வந்துள்ளது.
ஆசிரியர்கள் தவிர்த்து, சுகாதாரப் பணியாளர்கள், இராணுவ மற்றும் போலீஸ் வீரர்களும் அடிக்கடி மோசடிக்காரர்களால் குறிவைக்கப்படுகிறார்கள்.
மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறையின் தலைவர் சூப்ரிடென்டண்ட் Mohamad Izwan Ali அதனைத் தெரிவித்தார்.
கடந்தாண்டு மோசடிகளால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் 39 பேர்; இதுவே 2023-ல் 35 பேர் பாதிக்கப்பட்டனர்.
இதனால் அவர்கள் இழந்த தொகையும் 1.06 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து கடந்தாண்டு 1.48 மில்லியன் ரிங்கிட்டாக உயர்வு கண்டது.
இவ்வேளையில் மலாக்காவில் 2022 முதல் கடந்தாண்டு வரை, தொலைப்பேசி அழைப்பு மோசடி, இணைய ஷாப்பிங், காதல்/பார்சல் மோசடிகள், இல்லாத முதலீடுகள், போலி வேலை வாய்ப்புகள், ஆள்மாறாட்ட மோசடி ஆகியவை பரவலாகப் பதிவான குற்றங்கள் என்றார் அவர்.
என்ற போதிலும் முந்தைய ஆண்டை விட கடந்தாண்டின் முதல் 9 மாதங்களில் பதிவான மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை சரிவு கண்டு 850-தாக மட்டுமே பதிவாகியது.
ஏற்பட்ட மொத்த இழப்பும் சரிந்து கடந்தாண்டு 30.7 மில்லியன் ரிங்கிட்டாகப் பதிவாகியது.
இதே ஓராண்டுக்கு முன் 38.6 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாக Izwan தெரிவித்தார்.