
அம்பாங், அக்டோபர்-15, இன்று காலை முதல் பெய்த அடைமழையால் அம்பாங், தாமான் மெலாவாத்தி, Jalan E6-ல் நிலச்சரிவு ஏற்பட்டது.
வைரலான வீடியோவைப் பார்த்தால், மக்கள் குடியிருப்புப் பகுதிக்கருகே அச்சம்பவம் நிகழ்ந்திருப்பதாகத் தெரிகிறது.
மலை உச்சியிலிருந்து வேகமாக அடித்து வரும் மழைநீரில் மரங்கள் வேரோடு சாய்வதையும், வாகனங்கள் பாதிக்கப்படுவதையும் அதில் காண முடிகிறது.
இதனிடையே கிள்ளான், கம்போங் கிள்ளான் கேட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலர் பள்ளி பாதிக்கப்பட்டு, உதவி வரும் வரை மாணவர்கள் மேசைகளின் மேல் ஏறி நிற்கும் வீடியோவும் வைரலாகியுள்ளது.
எனினும் மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு விட்டதாக பயனர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்வேளையில் கோலாலம்பூரில் இன்று காலை 8 மணி முதல் பெய்து வரும் கனமழையால் புக்கிட் அமான் நோக்கிச் செல்லும் Jalan Parlimen உள்ளிட்ட பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.
சைரன் அபாய ஒலி எழுப்பப்படும் அளவுக்கு மலாயாப் பல்கலைக்கழக வளாகமும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது.
எனினும் வெள்ள நீர் வற்றி வருவதால் நிலைமைக் கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.