
கிள்ளான், அக் 21-ம.இ.கா கோத்தா ராஜா தொகுதி ஏற்பாட்டில் தீபாவளி விருந்து நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கிள்ளான் பொட்டானிக் அரச நகர் பொதுமண்டபத்தில் இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்த நிகழ்வில் ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்
முதலீடு , வர்த்தக தொழில்துறை அமைச்சர் செனட்டர் துங்கு ஷப்ரோல் , செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் , ம.இ.கா சிலாங்கூர் மாநில தலைவரும், கோத்தா ராஜா தொகுதி காங்கிரஸ் தலைவருமான டத்தோ M.சங்கர் ராஜ் ஐயங்கார் மற்றும் ம.இ.கா , அம்னோ மற்றும் தேசிய முன்னணி தலைவர்களும் கலந்துகொண்டனர்
இந்த விருந்து நிகழ்சியில் கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதி மற்றும் செந்தோசோ சட்டமன்ற தொகுதியிலுள்ள வசதி குறைந்த 250 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்களை வாங்குவதற்கு பற்றுச் சீட்டு
(வவுச்சர் ) வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய சங்கர் ராஜ் ஐயங்கார், கோத்தா ராஜா தொகுதியில் உள்ள வாக்காளர்களில் 62,000 பேர் இந்தியர்கள். அவர்களில் வசதி குறைந்தவர்களில் பலருக்கு சிலாங்கூர் அரசாங்கத்தின் தீபாவளி உதவிக்கான பற்றுச் சீட்டு கிடைக்காதது குறித்து வருத்தம் தெரிவித்தார். இதுபோன்ற விவகாரம் அடுத்த ஆண்டு தொடரக்கூடாது என்பதற்காக சிலாங்கூர் மந்திரிபுசார் மற்றும் கோத்தா ராஜா அம்னோ டிவிசன் தலைவர் தெங்க ஷப்ரோல் ஆகியோரிடம் பேச்சு நடத்தப்படும் என்று கூறினார்.
இதனிடையே சிலாங்கூர் அரசாங்கம் மக்களுக்கு பல்வேறு உதவி
திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால் இந்த திட்டங்கள் குறித்து மக்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு தெரியவில்லை. எனவே சிலாங்கூர் அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் இணைந்து சிலாங்கூர் முழுவதிலும் கருத்தரங்குகளை நடத்துவதற்கும் தாம் திட்டமிட்டுள்ளதாக சங்கர் ராஜ்
தெரிவித்தார். இந்த கருத்தரங்குகளில் இந்தியர்கள் கலந்துகொள்வதன் மூலம் சிலாங்கூர் அரசின் உதவித் திட்டங்களுக்கு எப்படி விண்ணப்பம் செய்வது, இதற்கான தகுதி உட்பட பல்வேறு விவகாரங்களை தெரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.