
திருமணமாகிவிட்டால் பெண் எல்லாவற்றிற்கும் அடங்கிப் போக வேண்டும் என்பதில்லை! பெண்ணை அடிமை போல் அடக்கி ஆள்வதால் ஒரு ஆண் நல்ல கணவனாகி விட முடியாது! வர்தட்சணை கேட்கும் குடும்பங்களின் சம்பந்தமே கூடாது!
எந்த கொடுமையானாலும் பெண் பொறுத்துதான் போகவேண்டும் என பெற்றோரின் கட்டாயம்கூடாது!
இத்தனை பாடங்களை வலியுறுத்தும் ஒரு வேதனையான சம்பவம்!
திருமணமாகி 78-டே நாட்களில் கணவன், மாமியார், மாமனார் கொடுத்த இன்னல்கள், கொடுமைகள், மன உளைச்சல்கள் தாங்காமல் பிறரிடமும் மனம் விட்டு சொல்ல முடியாமல் கடந்த ஜூன் 28-ல் தனது உயிரை மாய்த்துக் கொண்ட 27 வயது இளம் பெண் ரிதன்யாவின் செய்தியும் அவரது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவும் இன்றுவரை சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து சோகத்தில் ஆழ்த்துகின்றன.
ரியல் எஸ்டேட் தொழிலதிபரும் முன்னாள் அரசியல் வேட்பாளருமான அண்ணாதுரை – ஜெயசுதாவின் மகள் ரிதன்யா…
அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த கவின்குமார் என்பவருக்கு, கடந்த ஏப்ரல் 11ஆ-ம் தேதி அவர் மணம் முடித்து வைக்கப்பட்டார்.
சுமார் இரண்டரை கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்தேறியது.
திருமணத்தின் போதே 300 பவுன் தங்க நகைகள், 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான Volvo கார் உள்ளிட்டவை மாப்பிள்ளை வீட்டுக்கு வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டன.
மேலும் 200 பவுன் நகை பின்னர் வழங்கப்படுமென்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஆனால் திருமணமான 10 நாட்களிலேயே, எஞ்சிய வரதட்சனையான 200 பவுன் நகைகளைக் கேட்டும், அதே சமயத்தில் கணவன் உடல் ரீதியாகவும், மாமனாரும் மாமியாரும் மனரீதியாகவும் தன்னை துன்புறுத்தியதாக, தற்கொலைக்கு முன் தந்தைக்கு அனுப்பிய 7 வாட்சப் செய்திகளில் ரிதன்யா கூறியிருந்தார்.
தன்னை யாரும் காப்பாற்ற வேண்டாமெனவும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
சம்பவத்தன்று, கோயிலுக்கு சென்ற ரிதன்யா, வரும் வழியில் சாலையோரம் காரை நிறுத்தி, தென்னை மரங்களுக்குப் பயன்படுத்தப்படும் பூச்சி மருந்து உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
பெண் என்பவள் தம்மை பெற்று வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கிய தமது பெற்றோரையும் குடும்பத்தையும் திருமணத்திற்குப் பிறகு விட்டு பிரிந்து இனி புகுந்த வீடே அனைத்தும் என செல்வதே ஈடுகட்ட முடியாத பெரும் தியாகம்.
அதனை உணராது அவளிடம் வரதட்சணை கேட்பதும் அடிமை போல் நடத்துவதும் துன்புறுத்துவதும் எக்காரணம் கொண்டும்
நியாயப்படுத்த முடியாது. இனியாவது இதற்கு முடிவு கட்டப்படுமா?