
குளுவாங், நவம்பர் -6, குளுவாங் மாவட்டம் ஸ்ரீ லாலாங் பகுதியிலுள்ள வீட்டின் வெளிப்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீக்கிரையாகிய சம்பவத்தில், மிரட்டல் செய்தி கொண்ட ஒரு குறிப்புக் காகிதம் கிடைக்கபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று அதிகாலை நடந்த அச்சம்பவத்தின்போது, 31 வயதுடைய வீட்டின் உரிமையாளர் தீ பரவுவதைத் தவிர்ப்பதற்கு உடனடியாக மற்ற வாகனங்களை அங்கிருந்து அகற்றினார்.
அவர் தனது மனைவியுடனும், ஒரு வயது குழந்தையுடனும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அண்டை வீட்டார் அவரது ‘டொயோட்டா காம்ரி’ வாகனம் எரிந்து கொண்டிருப்பதை தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டிருந்தார்.
சம்பவம் குறித்த அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றவுடனேயே போலீஸ் மற்றும் தீயணைப்பு பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று தீயை முழுவதுமாக அணைத்தனர் என்று குளுவாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் பாஹ்ரின் முகமட் நோஹ் ( Bahrin Mohd Noh) தெரிவித்தார்.
அதேசமயம், சம்பவ இடத்தில் மிரட்டல் குறிப்பு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.மாநில குற்றப்புலனாய்வு துறையின் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயவியல் ஆய்வை மேற்கொண்டு, தீ விபத்திற்கான காரணத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதோடு அச்சம்பவம் குறித்த கூடுதல் தகவல் அறிந்தவர்கள் அருகிலுள்ள எந்தவொரு போலீஸ் நிலையத்தையும் தொடர்புகொள்ளலாம் என்று கூறப்பட்டது.



