Latestமலேசியா

அனைத்து இறக்குமதிகளுக்கும் புதிய வரி விதிப்பை அறிவித்தார் டிரம்ப்; மலேசியாவுக்கு 24%

வாஷிங்டன், ஏப்ரல்-3- உலக நாடுகளே பரபரப்பாக எதிர்பார்த்திருந்த அமெரிக்காவின் புதிய வரி விதிப்பை அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கப் பொருட்களுக்கு மற்ற நாடுகள் அதிக வரி விதிப்பதாகவும், எனவே பதிலடியாக ஏப்ரல் 2 தொடங்கி அந்தந்த நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார்.

அவ்வகையில் இன்று காலை வெள்ளை மாளிகையில் அவர் புதிய வரி விகிதங்களை அறிவித்து அதிர வைத்தார்.

அப்பட்டியலில் பேரிடியே சீனாவுக்கு தான்; உலக வாணிபத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் போட்டியாக மாறி வரும் சீனாவுக்கு புதிதாக 34 விழுக்காட்டு வரி விதிக்கப்படும்.

சீனப் பொருட்களுக்கு ஏற்கனவே 20 விழுக்காட்டு வரி விதிக்கப்படும் நிலையில், இப்போது மொத்தமாக 54% வரியை அந்நாடு செலுத்த வேண்டியுள்ளது.

ஆனால் சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கும் 67% வரியோடு ஒப்பிட்டால் இதுவொன்றும் பெரிதல்ல என்றார் அவர்.

அதே சமயம் தனது நெருங்கியப் பங்காளிகளையும் டிரம்ப் விட்டு வைக்கவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 20 விழுக்காட்டு வரியும் ஜப்பானுக்கு 24 விழுக்காட்டு வரியையும் அவர் அறிவித்தார்.

இந்தியா நட்பு நாடானாலும், அமெரிக்கப் பொருட்களுக்கு அதிகம் வரி விதிப்பதால், இந்தியப் பொருட்களுக்கு இனி 24 விழுக்காட்டு வரி விதிப்பதாக டிரம்ப் சொன்னார்.

மலேசியாவும் அப்பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

அமெரிக்கப் பொருட்களுக்கு 47% வரி விதிக்கும் மலேசியாவுக்கு டிரம்ப் 24 வரியை அறிவித்துள்ளார்.

அண்டை நாடுகளான இந்தோனேசியாவுக்கு 32%, தாய்லாந்துக்கு 36%, சிங்கப்பூருக்கு 10%, வியட்நாமுக்கு 46% விழுக்காடுமாக டிரம்ப் புதிய வரி விகிதத்தைத் நிர்ணயித்துள்ளார்.

ஏழை நாடுகளான வங்காளதேசத்துக்கு 37%, இலங்கைகக்கு 44%, கம்போடியாவுக்கு 49% என வரி விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எந்தெந்த நாடுகள் அமெரிக்காவுக்கு எவ்வளவு வரி விதிக்கின்றன, அவற்றுக்கு அமெரிக்கா எவ்வளவு விதிக்கிறது என்ற ஒப்பீட்டு பட்டியலையும் டிரம்ப் வெளியிட்டார்.

இது உலக நாடுகளை வஞ்சிக்கும் நடவடிக்கை அல்ல; மாறாக காலங்காலமாக அமெரிக்காவுக்கு உலக நாடுகள் அதிக வரி விதித்து நியாயமற்ற வகையில் நடந்துகொள்வதற்கு பதிலடியே.

அமெரிக்காவின் அதிபர் என்ற முறையில் வாணிபத்தில் இந்த சமச்சீரற்ற நிலையைத் தடுப்பது தனது கடமை என்றார் அவர்.

இறக்குமதிப் பொருட்களுக்கு பேரளவில் வரி விதித்து உலக நாடுகளையே டிரம்ப் ஆட்டம் காண வைத்துள்ளதால், பங்குச் சந்தைகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கலாம் என கவலை எழுந்துள்ளது.

இது வர்த்தக மோதலை மோசமாக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

மலேசியா உள்ளிட்ட பாதிக்கப்பட்ட நாடுகள் இப்புதிய வரி விதிப்புக்கு எப்படி எதிர்வினையாற்றப் போகின்றன என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!