
வாஷிங்டன், அக் 23 – மெக்டொனால்ட் துரித உணவு நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ‘குவாட்டர் பவுண்டர் ( Quater Pounder ) பெர்கருடன் தொடர்புடைய E.Coli தொற்று குறித்து CDC எனப்படும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உணவு பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாக CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதியவர் சம்பந்தப்பட்ட ஒரு மரணம் உட்பட 10 மாநிலங்களில் குறைந்தது 49 பேர் E.Coli தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஹீமோலிடிக் யூரிமிக் சிண்ட்ரோம் (Uremic Hemolitik) கொண்ட குழந்தை உட்பட மொத்தம் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது E.Coli நோய்த் தொற்றிலிருந்து உருவாகக்கூடிய ஒரு தீவிரமான சிக்கலை கொண்டதாகும்.
பெரும்பாலான நோயாளிகள் கொலோரடோ (Colorado ) மற்றும் நெப்ரஸ்கா ( Nebraska ) மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர். E.Coli தொற்றுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலோர் பிரபலமான Quarter Pounder பெர்கர் உட்கொண்டதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு உணவு பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
மதிப்பாய்வு செய்யப்பட்ட தகவல்களின்படி பயன்படுத்தப்பட்ட வெங்காயம் காரணமாக தொற்று பரவியிருக்கலாம் என கூறப்பட்டது. மெக்டொனால்ட் ( McDonald) பல மாநிலங்களில் பெர்கரில் வெங்காயம் மற்றும் மாட்டிறைச்சியைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.