கொட்டோ கொட்டென கொட்டிய லஞ்சப் பணம்; நகைக் கடையைத் திறந்த குடிநுழைவு அதிகாரிகளான கணவனும் மனைவியும் கைது

புத்ராஜெயா, செப்டம்பர்-14,
குடிநுழைவுத் துறை அதிகாரிகளான ஒரு கணவனும் மனைவியும் 4 ஆண்டுகளில் வாங்கிய லஞ்சப் பணத்தில் 600,000 ரிங்கிட் முதலீட்டில் ஒரு நகைக் கடையையே திறந்துள்ளனர்.
முறையான பயணப் பத்திரம் இல்லாத வெளிநாட்டவர்களை சட்டவிரோதமாக இந்நாட்டுக்குள் நுழைய அனுமதிப்பதற்காக அத்தம்பதி லட்சக் கணக்கில் லஞ்சம் வாங்கி வந்துள்ளது.
அம்மாதுவின் தங்கை மற்றும் அத்தம்பதியின் சொந்த பிள்ளையை பினாமியாக வைத்து நகைக் கடை திறக்கப்பட்டுள்ளது, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் விசாரணையில் தெரிய வந்தது.
ஒவ்வொரு வெளிநாட்டு த் தொழிலாளிக்குமான விண்ணப்ப பரிசீலனையை 7 நாட்களிலிருந்து 3 நாட்களுக்கு விரைப்படுத்த, முதலாளிகளிடமிருந்து தலைக்கு 700 ரிங்கிட் லஞ்சம் ரொக்கமாகப் பெறப்பட்டுள்ளது.
அதில் சந்தேக நபர்களுக்கு தலா 150 ரிங்கிட் வழங்கியது போக, மீதி பணத்தை கோப்புகளை நிர்வகிக்கும் மற்ற அதிகாரிகள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டுள்ளனர்.
இப்படியாக 2020-ஆம் ஆண்டிலிருந்து அந்தக் கணவனும் மனைவியும் குவித்த மொத்த லஞ்சப் பணம் 900,000 ரிங்கிட்டாகும்.
நகைக்கடைக்கு 600,000 ரிங்கிட் முதலீடு போக மீதிப் பணத்தில் ஒரு ஆடம்பரக் காரையும் அவர்கள் வாங்கியுள்ளனர்.
பஹாங்கில் உள்ள நகைக் கடையில் MACC நடத்திய சோதனையில், 1.4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 3 கிலோ கிராம் நகை சேமிப்பும் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து 40 வயது மதிக்கத்தக்க அத்தம்பதியர் விசாரணைக்காக 5 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.