Latestமலேசியா

கிள்ளான் மாநகர் மன்ற உறுப்பினர்களாக 4 இந்தியர்கள் உள்பட 15 பேர் நியமனம்

கிள்ளான், பிப்3- கிள்ளான் மாநகர் மன்ற உறுப்பினர்களாக நான்கு இந்தியர்கள் உள்பட 15 பேர் இன்று பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்த பதவி உறுதிமொழிச் சடங்கு இங்குள்ள கிள்ளான் மாநகர் மன்ற தலைமையகத்தின் ராஜா மஹாடி கூட்ட அறையில் டத்தோ பண்டார் டத்தின் நோராய்னி ரோஸ்லான் முன்னிலையில் நடைபெற்றது. இந்த 2024/2025ஆம் தவணைக்கான புதிய மாநகர் மன்ற உறுப்பினர்களில் இநதியர்களைப் பிரதிநிதித்து DAPயின் யுகராஜா பழனிசாமி , குமணன் பெருமாள், பி.கே.ஆர் கட்சியின் தங்கராஜன் த/பெ அப்துல் காசிம், ரோய் ஞானேஸ்வரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மொத்தம் 24 உறுப்பினர்களைக் கொண்ட கிள்ளான் மாநகர் மன்றத்தில் தற்போது 15 பேர் மட்டுமே நேற்று நியமனம் செய்யப்பட்டனர். அவர்களில் நால்வர் பி.கே.ஆர். கட்சியையும் எண்மர் ஜசெகவையும் இருவர் அமானா கட்சியையும் பிரதிநிதிக்கின்றனர். எஞ்சியோர் கட்டங் கட்டமாக இப்பதவிக்கு நியமிக்கப்படவுள்ளனர்.

கிள்ளான் நகராண்மைக் கழகம் இம்மாதம் 5ஆம் தேதி மாநகராக அதிகாரப்பூர்வமாக பிரகடனப்படுத்தப்படவுள்ள நிலையில் மாநகர் மன்ற உறுப்பினர்கள் என்றப் பெருமையைப் பெறும் முதல் கவுன்லர்களாக இவர்கள் விளங்குகின்றனர். கிள்ளான் மாநகர் மன்றத்தின் முதலாவது டத்தோ பண்டாராக நோராய்னி கடந்த ஜனவரி மாதம் 3ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இவர் ஈராண்டுகளுக்கு இப்பதவியை வகிப்பார். கிள்ளானை மாநகராக பிரகடனப்படுத்தும் நிகழ்வு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் தலைமையில் நடைபெறும். பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலம், சுபாங் ஜெயாவுக்கு அடுத்து மாநகர் அந்தஸ்தைப் பெறும் நான்காவது நகராக கிள்ளான் விளங்குகிறது. சுமார் 11 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்த நகரை நிர்வத்து வரும் கிள்ளான் நகராண்மைக் கழகம் ஆண்டுக்கு 10 கோடி வெள்ளியை வருமானமாக ஈட்டுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!