
இஸ்கண்டார் புத்ரி, ஏப்ரல்-15, ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி, தாமான் முத்தியாரா ரினியில் தம்மிடம் கடன் வாங்கிய ஆடவரின் வீட்டையே எரித்துள்ளார் கடன் கொடுத்த நபர்.
கோபத்தில் 22 வயது அவ்விளைஞர் செய்த செயலால், தீ வேகமாகப் பரவி மேலுமிரண்டு டேரஸ் வீடுகளும் பாதிக்கப்பட்டன.
தகவல் கிடைத்து தீயணைப்பு – மீட்புத் துறை சம்பவ இடம் விரைந்து தீயை அணைத்தது.
இதையடுத்து தீ வைத்த ஆடவர் ஞாயிற்றுக் கிழமை கைதானதாக, இஸ்கண்டார் புத்ரி போலீஸ் தலைவர் துணை ஆணையர் எம். குமராசன் கூறினார்.
வாங்கியக் கடனைத் திருப்பிக் கொடுக்காததால் வீட்டையே எரிக்கும் முடிவுக்கு அவர் போனது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
சந்தேக நபர் ஏற்கனவே 2 குற்றப் பதிவுகளைக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது; எனினும் அவர் போதைப் பொருள் உட்கொண்டிருக்கவில்லை.
விசாரணைக்கு உதவும் பொருட்டு வரும் வெள்ளிக் கிழமை வரை அந்நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.