
கோலாலம்பூர், செப்டம்பர்-24 – தேசியக் கொடியான Jalur Gemilang இறக்கப்பட்டு, சபா – சரவாக் மாநிலங்களின் கொடிகள் ஏற்றப்பட்ட வீடியோ வைரலாகியிருப்பது குறித்து, போலீஸ் விசாரித்து வருகிறது.
தேசியக் கொடியைச் சிறுமைப்படுத்தும் அச்செயல் தொடர்பில் 1948 தேச நிந்தனைச் சட்டம், 1998 தொடர்பு-பல்லூடக ஆணையச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.
தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் (Tan Sri Razarudin Husain) அதனைத் தெரிவித்தார்.
செப்டம்பர் 16-ஆம் தேதி ஆஸ்திரேலியா, மெல்பர்ன் நகரில் அச்சம்பவம் நிகழ்ந்திருப்பது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதது.
அதில், அவ்விரு மாநிலங்கள் மீதான மலேசியாவின் காலனித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வருவதன் அடையாளமாக Jalur Gemilang கொடியை இறக்குவதாகக் கூறிக் கொண்ட கும்பல், சபா-சரவாக் இரண்டையும் குடியரசுகளாக அறிவிப்பதாகவும் கூறிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
அச்சம்பவம் தொடர்பில் இதுவரை 35 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன.
சபாவை முகவரியாகக் கொண்ட நபர் அவ்வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவேற்றியதும் தெரிய வந்துள்ளது.
அவ்வாடவருக்கும், அவ்வீடியோ எடுக்கப்பட்டதற்குமான தொடர்பு தீவிரமாக விசாரிக்கப்படுகிறது.