
சுங்கை பூலோ, அக்டோபர்-5,
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தில் இடைத்தரகர்கள் கலாச்சாரத்திற்கு இடமில்லை.
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அவ்வாறு திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
முந்தைய அரசாங்கங்களின் கீழ் அக்கலாச்சாரம் பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாக இருந்துள்ளதால், அதே தவற்றை மடானி அரசாங்கம் செய்யாது என்றார் அவர்.
Dharma MADANI திட்டத்தின் கீழ் முதன் முறையாக 1,000 இந்து ஆலயங்களுக்கு one-off முறையில் தலா 20,000 ரிங்கிட் மானியம் வழங்கும் திட்டம் குறித்து சில தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளது குறித்து ரமணன் கருத்துரைத்தார்.
இத்திட்டம் தற்போது பிரதமரின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகக் கூறிய துணையமைச்சர், விரைவில் பிரத்யேக இணைய அகப்பக்கம் திறக்கப்பட்டதும், உதவித் தேவைப்படும் கோயில்கள் விண்ணப்பிக்கலாம் என்றார்.
இதனிடையே பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளி சந்தை தொடர்பில் பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதாக ரமணன் சொன்னார்.
அதில் தானோ அமைச்சோ நேரடியாக ஈடுபடவில்லை; மாறாக அது DBKL மற்றும் பேங்க் ராக்யாட் இடையிலான ஒரு கூட்டு ஒத்துழைப்பு என அவர் தெளிவுப்படுத்தினார்.
என்றாலும், சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு டெப்பாசிட் முன்பணம் திருப்பித் தரப்படும்.
அதே சமயம், காற்றில் பறக்கும் அளவுக்கு விற்பனைக் கூடாரங்கள் வலுவற்றதாக இருப்பதாகக் கூறப்பட்ட புகார்களும் உரிய வகையில் கையாளப்பட்டு, சரி செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள 2026 பட்ஜெட், மக்கள் நலன் காக்கும் பட்ஜெட்டாக இருக்குமென்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
பல்வேறு கலந்தாய்வுகளுக்குப் பிறகு அமைச்சின் சார்பில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன; இனி பிரதமரின் அறிவிப்புக்குக் காத்திருப்போம் என்றார் அவர்.
எது எப்படி இருப்பினும், இன அடிப்படையில் அல்லாமல், மடானி கொள்கைக்ககு ஏற்ப அனைவருக்குமான ஒரு பட்ஜெட்டாக விளங்கும் என்பது மட்டும் உறுதி என ரமணன் சொன்னார்.
சுங்கை பூலோவில் ‘தீபாவளி வணக்கம் மடானி’ திட்டத்தைத் தொடக்கி வைத்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.