
புத்ராஜெயா செப்டம்பர் -24,
தங்கள் ஓட்டுநர் உரிமத்தை (Competent Driving Licence – CDL) மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்காததால், சுமார் 24 லட்சம் மலேசியர்கள் BUDI மடானி RON95 எரிபொருள் உதவித் தொகையைப் பெறும் தகுதியை இழந்துள்ளனர் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
சாலைப் போக்குவரத்து துறை (JPJ) தரவுகளின் படி, நாட்டில் தற்போது சுமார் 1.5 கோடி உரிமைகள் செல்லுபடியாக இருந்தாலும், அதில் 9,25,421 உரிமைகள் மூன்று ஆண்டுக்குள் காலாவதியானவையாக பதிவாகியுள்ளன.
எனவே, அவர்கள் உடனடியாக உரிமத்தைப் புதுப்பிக்காவிட்டால், BUDI95 சலுகையும் இழக்க நேரிடும் மட்டுமல்லாமல், மீண்டும் ஓட்டுநர் தேர்வின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளை எழுத வேண்டிய கட்டாயமும் உருவாகும் என்று எச்சரித்தார்.
செப்டம்பர் 22 ஆம் தேதியன்று அரசு BUDI95 திட்டத்தை அறிவித்ததிலிருந்து, MyJPJ பயன்பாடு, MySingCard, JPJ கியோஸ்க் மற்றும் நாட்டிலுள்ள JPJ கவுண்டர்கள் வழியாக மொத்தம் 26,991 CDL புதுப்பிப்பு பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது.
மேலும், உரிமத்தைப் புதுப்பிக்கும் நடைமுறை இப்போது மிகவும் எளிதானதாக மாறியிருப்பதோடு, MyJPJ செயலியின் வாயிலாக இரண்டு நிமிடங்களுக்குள் புதுப்பிப்பு முடிக்கப்படலாம் என்பதால் பொதுமக்கள் இனியும் தாமதிக்க கூடாது என்று லோக் குறிப்பிட்டார்.
முன்னதாக, பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வரும் செப்டம்பர் 30 முதல் மலேசிய குடிமக்களுக்கு RON95 எரிபொருள் விலை லிட்டருக்கு 1.99 ரிங்கிட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.