
கோலாலம்பூர், டிசம்பர்-30 – முன்னாள் பிரதமர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின், ஜனவரி 1 முதல் PN எனப்படும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சற்று முன்னர் வெளியிட்ட சுருக்கமான அறிக்கையில், இந்த 5 ஆண்டு காலமும் தமக்கு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கிய அனைவருக்கும் அவர் நன்றித் தெரிவித்தார்.
PN-னின் அடுத்தத் தலைமைக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
தனது பதவி விலகலை PN நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாட்சப் குழுவில் முஹிடின் தெரிவித்ததாக, நேற்றிரவு முதலே வதந்திகள் பரவின.
முஹிடினின் இந்த விலகல், பெர்லிஸ் மாநிலத்தில் பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் நடத்திய ‘அரசியல் சதியால்’ மந்திரி பெசார் பதவி பாஸ் கட்சியின் கையை விட்டு போனதால் ஏற்பட்ட பதற்றத்தின் பின்னணியில் வருகிறது.
பெர்சாத்து ‘துரோகமிழைத்து’ விட்டதாகக் கூறி பெரிக்காத்தானிலிருந்து பாஸ் விலகி மீண்டும் அம்னோவுடன் இணைய வேண்டும் அல்லது PN கூட்டணியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டுமென பாஸ் தலைவர்கள் வெளிப்படையாகவே மிரட்டிய நிலையில், முஹிடின் பதவி விலகியுள்ளார்.
இது ‘சரியான மற்றும் புத்திசாலித்தனமான நடவடிக்கை’ என பாஸ் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
பாஸ், பெரிக்காத்தானுக்குப் புதிய தலைவரை பரிந்துரைக்கவுள்ளது.
அது கட்சித் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் அல்லாமல், கூட்டணியின் வலிமையை ஒருங்கிணைக்கக் கூடிய நபராக இருக்கலாம் என, பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் Ahmad Fadhli Shaari கூறியுள்ளார்.
திரங்கானு மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சம்சூரி மொக்தாரே பாஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்பு பேசப்பட்டவர்…
இந்நிலையில், இப்போது PN தலைவராக அவரின் பெயரையே பாஸ் முன்மொழியலாம் எனக் கூறப்படுகிறது.



