
“Tun Dr Siti Hasmah Mohd Ali நாட்டிற்கும் மக்களுக்கும் ஆற்றிய சேவைகளை நாம் என்றும் நினைவுகூருவோம். அவருக்கு நாட்டுத் தலைவர்களுக்குரிய இறுதிச்சடங்கு மரியாதை வழங்கப்பட வேண்டும்.”
முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad-ன் துணைவியார் Tun Dr Siti Hasmah Mohd Ali மறைவையொட்டி, பிரதமர் Datuk Seri Anwar Ibrahim இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவரது இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை மேற்கொள்ள அரசாங்கத் தலைமைச் செயலாளர் Tan Sri Shamsul Azri Abu Bakar மற்றும் ஆயுதப்படைத் தளபதி Tan Sri Malek Razak Sulaiman ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Tun Dr Siti Hasmah, பிரதமரின் துணைவியாராக இருந்த காலத்திலும் பல்வேறு சமூக மற்றும் நலத்திட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றவர். பொதுமக்களின் பிரச்சினைகள் மீது அக்கறை காட்டியதுடன், நாட்டிற்குப் பல்வேறு வழிகளில் சேவையாற்றிய முக்கியமான பெண் ஆளுமையாகவும் அவர் திகழ்ந்ததாக Anwar நினைவுகூர்ந்தார்.
அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த Anwar, Tun Dr Mahathir மற்றும் குடும்பத்தினருக்கும் தனது அனுதாபத்தைத் தெரிவித்தார். இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் Al-Fatihah ஓதி அவருக்காகப் பிரார்த்தனை செய்ததாகவும், இறுதி மரியாதை மற்றும் நல்லடக்க நிகழ்வில் தாம் பங்கேற்கவுள்ளதாகவும் கூறினார்.
Tun Dr Siti Hasmah இன்று காலை தேசிய இருதய சிகிச்சைக் கழகமான IJN-இல் காலமானார். இதனை அவரது புதல்வர் Tan Sri Mokhzani Mahathir உறுதிப்படுத்தினார்.
1926ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பிறந்த Tun Dr Siti Hasmah, கடந்த ஜூலை மாதம் தனது 100ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். மருத்துவம், சமூக நலன் மற்றும் சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.
Tun Dr Siti Hasmah – Tun Dr Mahathir Mohamad தம்பதியருக்கு நான்கு சொந்தப் பிள்ளைகளும் மூன்று தத்துப் பிள்ளைகளும் உள்ளனர்.



