
கோலாலம்பூர், ஏப்ரல்-17, மலேசியாவின் எதிர்கால பணியாளர்களை உருவாக்கும் கடப்பாட்டில் UMW Toyota Motor Sdn Bhd, T-TEP எனப்படும் Toyota தொழில்நுட்பக் கல்வித் திட்டத்தை 25 கல்வி நிறுவனங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கோலாலம்பூர், Le Meridien ஹோட்டலில் இன்று கையெழுத்தானது.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் கல்வி அமைச்சு, ம.இ.கா வின் TAFE கல்லூரி, MARA, WIT கல்லூரி, கோலாலம்பூர் பல்கலைக் கழகம் உள்ளிட்டவையும் அடங்கும்.
இந்த ஒத்துழைப்பின் வாயிலாக அடிப்படைப் பயிற்சியைக் கொடுத்து, வேலைச் சந்தைக்கு மாணவர்களைத் துணிச்சலோடு தயார்படுத்துவதே தங்களின் முக்கிய நோக்கமென, UMW Toyota Motor Sdn bhd தலைவர் டத்தோ ரவீந்திரன் .கே, வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
வெறும் ஐந்திலிருந்து இத்திட்டம் இப்போது 25 பங்காளி நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது; அடுத்து அவ்வெண்ணிக்கை 40-தாக உயர வேண்டுமென்றார் அவர்.
இவ்வேளையில், இன்றைய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு சரித்திரப்பூர்வமான நிகழ்வு என TAFE கல்லூரியை நிர்வகிக்கும் ம.இ.காவின் MIED Capital Sdn Bhd-டின் இயக்குநர் டத்தோ எம்.அசோஜன் வருணித்தார்.
மற்ற தொழில்பயிற்சிக் கல்லூரிகளைக் காட்டிலும் UMW Toyota-வின் பயிற்சித் திட்டம் தனித்துவம் வாய்ந்தது என்றும் அவர் சொன்னார்.
இத்திட்டத்தின் மூலம் TAFE கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு UMW Toyota-வில் வேலை வாய்ப்பு உறுதியாகுமென, சிரம்பான் TAFE கல்லூரியின் நிர்வாகி டத்தோ இப்ராஹிம் ஷா சாகுல் ஹமிட் கூறினார்.
புதியத் தொழில்நுட்பங்கள் குறிப்பாக EV எனப்படும் மின்சார வாகனங்களை உட்படுத்தியப் பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுவது சிறப்பம்சம் என இப்ராஹிம் சொன்னார்.
இன்றையத் தேதிக்கு, UMW Toyota நிறுவனம் T-TEP திட்டத்தில் கிட்டத்தட்ட 20 மில்லியன் ரிங்கிட்டை முதலீடு செய்துள்ளது.
இது மலேசியா முழுவதும் சுமார் 7,000 திறமையான பட்டதாரிகளை உருவாக்க உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.