புத்ராஜெயா, செப்டம்பர்-23, ஆறாமாண்டு மாணவர்களுக்கான UPSR தேர்வும், மூன்றாம் படிவ மாணவர்களுக்கான PT3 பள்ளி நிலையிலான மதிப்பீடும் மீண்டும் கொண்டு வரப்படாது!
அவ்விரு தேர்வுகளையும் அகற்றிய முந்தைய அரசாங்கத்தின் முடிவு நிலை நிறுத்தப்படுவதாக, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் (Fadhlina Sidek) இன்று தெரிவித்தார்.
UPSR-யையும் PT3-யையும் மீண்டும் கொண்டு வர வேண்டுமென அண்மையக் காலமாக கோரிக்கைகள் எழுந்தாலும், அமைச்சு அம்முடிவில் உறுதியாக உள்ளது.
உண்மையிலேயே அத்தேர்வுகளை திரும்பக் கொண்டு வர வேண்டுமென்றால், கவனமுடன் முழு அளவில் அது மேற்கொள்ளப்பட வேண்டும்.
மாறாக, எல்லாரும் நினைப்பது போல் அவ்வளவு எளிதில் அது சாத்தியமாகி விடாது என்றார் அவர்.
நம் பிள்ளைகள் ஒன்றும் ஆய்வுக் கூட எலிகள் அல்ல, சதா காலமும் பரிசோதித்துப் பார்ப்பதற்கு.
நினைத்தால் தேர்வுகளைக் கொண்டு வருவதும், நினைத்தால் அகற்றுவதுமாக இருந்தால், கல்வியில் நாம் ஒன்றும் சாதிக்க முடியாது.
ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து விட்டால், அதில் உறுதியாக இருக்க வேண்டும் என ஃபாட்லீனா சுட்டிக் காட்டினார்.
மேற்கண்ட இரு தேர்வுகள் அகற்றப்பட்டு விட்டாலும், வகுப்பறை சார் மதிப்பீடுகளை வலுப்படுத்தவும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் இடையூறு வராத வகையில் ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்குவதிலும் அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் சொன்னார்.