Latest

WYIE 2026: அனைத்துலக புத்தாக்க கண்டுபிடிப்பு அரங்கில் கின்றாரா தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அசாத்திய சாதனை; விக்னேஸ்வரன் பாராட்டு

கோலாலம்பூர், மே-31,

கோலாலம்பூரில் அண்மையில் நடைபெற்ற 2026 உலக இளம் கண்டுபிடிப்பாளர்கள் கண்காட்சியில் (WYIE), கின்றாரா தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக அளவில் மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது, நாட்டின் பெயரை உலக அரங்கில் உயர்த்தியுள்ளதாக ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பாராட்டியுள்ளார்.

​இப்பள்ளியின் நான்காமாண்டு மாணவர்கள், நீரிழிவு நோயாளிகளுக்காக ‘GlucoGuard – Smart Night Alert System என்ற அதிநவீனக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.

தூக்கத்தின் போது ஏற்படும் ஆபத்தான சர்க்கரைக்குறைவை ஒலி மற்றும் ஒளி மூலம் எச்சரிக்கும் இந்த மலிவு விலை சாதனம், அவர்களுக்குத் தங்கப் பதக்கம், சவூதி அரேபியாவின் சிறப்பு விருது மற்றும் தொடக்கப்பள்ளி பிரிவில் ‘சிறந்த புத்தாக்க விருது’ ஆகிய 3 முக்கிய அங்கீகாரங்களைப் பெற்றுத் தந்துள்ளது.

ஆசிரியை ஈஸ்வரி தலைமையில் மாணவர்கள் ஆதிஷா மூர்த்தி, சிரஞ்சீவனி அகத்தீஸ்வரன், ஈஷா விஜேந்திரன் ஆகியோர் இதனை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.

மாணவர்களின் இந்த அசாத்திய சாதனைக்கும் அவர்களை தயார்படுத்திய ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கும் விக்னேஸ்வரன் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் அவர்களை அழைத்து கெளரவிப்பும் செய்யப்படும் என அவர் கூறினார்.

இம்மாணவர்களின் கண்டுபிடிப்பு ஒட்டுமொத்த மலேசிய இந்தியச் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வளவு சிறிய வயதில் உலகளாவிய சுகாதாரப் பிரச்னைக்குத் தீர்வு கண்ட மாணவர்களின் பன்முகத்திறன் வியக்க வைப்பதாக குறிப்பிட்டார்.

​மேலும், இம்மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் (STEM) துறையில் சாதிக்கத் துடிக்கும் அடுத்த தலைமுறைக்கு ஒரு சிறந்த முன்மாதிரி என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!