
ஃபுளோரிடா, மார்ச்-28-உலகப் புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் Tiger Woods, அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்துக்குப் பிறகு அதிரடியாகக் கைதுச் செய்யப்பட்டு, உடனடியாகச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்விபத்து, அவரது வீட்டுக்கு அருகிலுள்ள Jupiter Island பகுதியில் ஏற்பட்டது.
அவர் ஓட்டியக் கார் மற்றொரு வாகனத்தை முந்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
நல்ல வேளையாக விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சம்பவத்தின் போது, அவர் மது போதையில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால், சுவாச பரிசோதனையில், அவர் உடலில் மதுபானம் இல்லை என தெரியவந்துள்ளது.
இதனால், மருந்து மாத்திரைகள் அல்லது போதைப்பொருள் உட்கொண்டு அவர் மயக்கத்தில் இருந்திருக்கலாம் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சிறுநீர் பரிசோதனைக்கு உடன்பட மறுத்ததால், அதற்கான தனி குற்றச்சாட்டும் அவர் மீது பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு போதையில் வாகனமோட்டியக் குற்றச்சாட்டில் கைதுச் செய்யப்பட்டதும், பின்னர் 2021-ஆம் ஆண்டு கடுமையான விபத்தில் சிக்கியதும், Tiger Woods சந்தித்த முந்தையச் சம்பவங்களாகும்.
இப்போது இப்புதிய வழக்கினால், அவரது எதிர்கால போட்டி திட்டங்கள் கேள்விக் குறியாகியுள்ளன.



