
அசாம் பாக்கியை விசாரிக்க சிறப்புப் பணிக் குழு; அமைச்சரவை முடிவு
கோலாலாம்பூர், பிப்ரவரி-13,
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கியை விசாரிக்க அரசாங்கம் சிறப்புப் பணிக் குழுவை அமைத்துள்ளது.
அதற்கு அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் தலைமையேற்பார் என அமைச்சரவை முடிவுச் செய்துள்ளதாக, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
விசாரணை அறிக்கையை மேல் நடவடிக்கைகாக அவர் அமைச்சரவையிடம் சமர்ப்பிப்பார் என ஃபாஹ்மி சொன்னார்.
எனினும், அசாம் பாக்கியை இடைநீக்கம் செய்வதா இல்லையா என்பது குறித்து அமைச்சரவை விவாதிக்கவில்லை என ஃபாஹ்மி விளக்கினார்.
இந்த பணிக்குழு மற்றும் அதன் விசாரணைக் கோணங்கள் குறித்த மேல் விவரங்களை தான் ஸ்ரீ ஷம்சுல் பின்னர் அறிவிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய நிறுவன ஆணையமான SSM-மிடம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் படி, Velocity Capital Partner Bhd நிறுவனத்தில் அசாம் பாக்கி 17.7 மில்லியன் பங்குகளை வைத்திருப்பதாக, பிரபல Bloomberg செய்தி முன்னதாக பரபரப்பு செய்தியை வெளியிட்டது.
அதனை அசாம் பாக்கி திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், தனது செய்தியை Bloomberg தற்காத்துள்ளது.
அதே சமயம், அசாம் பாக்கி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும், அவர் மீது விசாரணை தொடங்க வேண்டுமென கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.



