
கோலாலம்பூர், நவம்பர்-1,
அமெரிக்காவுடன் புதிய வாணிப ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திட்டிருப்பதை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் தற்காத்து பேசியுள்ளார்.
அரசாங்கம் பல முறை விரிவாக விளக்கியப் பிறகும் 2 முன்னாள் பிரதமர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதென அவர் சொன்னார்.
அமெரிக்காவிடம் மலேசியா ‘மண்டியிட்டு விட்டது’ என்ற ரீதியிலும் இறையாண்மையை ‘விற்று விட்டது’ போலவும் துன் Dr மகாதீர் மொஹமட், தான் ஸ்ரீ முஹிடின் யாசின் இருவரும் பேசி வருகின்றனர்.
மகாதீர் நாம் என்ன சொன்னாலும் கேட்கப் போவதில்லை; முஹிடினுக்கோ பெர்சாத்து உட்கட்சி பூசல் தலைவலியாக உள்ளது; ஆக இருவரும் இவ்விவகாரத்தை அரசியல் ஆயுதமாக எடுத்துள்ளனர் என அன்வார் சொன்னார்.
எதிர்கால பொருளாதாரத்தை வலுப்படுத்த, மலேசியாவுக்கு அந்நிய முதலீடுகள், AI உள்ளிட்ட உயர்தர தொழில்நுட்பங்கள் முக்கியமாகும்.
எனவே, அமெரிக்க நிறுவனமோ, கொரிய, சீன நிறுவனங்களோ…அடுத்தத் தலைமுறை பயன்பெறுவதை உறுதிச் செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
அதற்காக நாட்டின் இறையாண்மையை அடகு வைத்து விட்டதாகக் கூறுவதெல்லாம் அபத்தமான பேச்சு என, தென் கொரியாவில் நடைபெறும் APEC மாநாட்டுக்கு வெளியே அன்வார் கூறினார்.



