
புத்ராஜெயா, அக்டோபர்-31,
அமைச்சர்கள் வழங்கும் ஒவ்வொரு பதிலும் விவேகத்துடனும் திறந்த கொள்கையுடனும் இருக்க வேண்டுமென, ஒற்றுமை அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்ஸில் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் மற்றும் ஊடகங்கள் பரஸ்பர மரியாதையுடன் செயல்பட வேண்டுமென, தொடர்புத் துறை அமைச்சருமான அவர் சொன்னார்.
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் ஒரு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு மிரட்டும் தொனியில் பதிலளித்ததாக முன்னதாக சர்ச்சை எழுந்தது.
அது பற்றி இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறிய ஃபாஹ்மி, பத்திரிகையாளர்களின் கேள்வி கேட்கும் உரிமையை அரசாங்கம் எப்போதும் மதிக்கிறது என்று தெரிவித்தார்.
Visit Malaysia Year 2026 பிரச்சார இயக்கத்தை ஒட்டிய “I Lite U” திட்டத்திற்கு ஏன் ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளது என பத்திரிகையாளர் கேட்டபோது, அது அனைத்துலக சுற்றுப் பயணிகளுக்காக என்று அமைச்சர் முதலில் விளக்கினார்.
ஆனால், அந்தக் கேள்வியைக் கேட்டதற்காக சம்பந்தப்பட்ட பத்திரிகையின் ஆசிரியரைத் தொடர்புகொள்ளவிருப்பதாக ங்கார் கோர் மிங் பேசியதே விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
அமைச்சரின் செயல், ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் என, மலேசிய பத்திரிகையாளர்களின் தேசிய சங்கம் NUJM கண்டித்தது.
இந்நிலையில், ங்கார் கோர் மிங் விரைவில் ஊடகங்களுக்கு விளக்கம் அளிப்பார் என்றும் உத்துசான் மலேசியாவை சந்திப்பார் என்றும் ஃபாஹ்மி கூறினார்.



