
கோலாலம்பூர், நவம்பர் 5- அம்பாங் ஜெயா முத்தியாரா கோர்ட் அப்பார்ட்மென்ட் (Mutiara Court Apartment) Block 3 அருகே நேற்று ஏற்பட்ட பாறை சரிவு சம்பவத்திற்கு 15 ஆண்டுகளுக்கு முன்னதாக ஏற்பட்ட wedge failure எனப்படும் பாறை சரிவுகளின் குவியல்கள்தான் காரணமென்று அம்பாங் ஜெயா ஊராட்சி மன்றம் (MPAJ) தெரிவித்துள்ளது.
2010-ஆம் ஆண்டு அந்த பாறை சரிவுப் பகுதியில் கல் பாதுகாப்பு வலையமைப்பு நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், காலப்போக்கில் வலையமைப்பு சேதமடைந்ததால் சில பெரிய பாறைகள் கீழே விழ தொடங்கியுள்ளன.
சம்பவத்துக்குப் பிறகு உடனடியாக, MPAJ பாதுகாப்புக் கயிறுகள் பொருத்தும் பணி மற்றும் பாறை அகற்றும் சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டது. இப்பணிகள் இன்றும் தொடருமென்று தெரிவிக்கப்பட்டது.
நீண்டகால தீர்வாக, பாறை மேற்பரப்பில் வளர்ந்துள்ள காட்டு தாவரங்களை அகற்றுவது மற்றும் சேதமடைந்த வலையமைப்பை மீண்டும் பொருத்துவது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும், பாறை நிலத்தின் நிலைத்தன்மையை மதிப்பீடு செய்ய பொது பணி துறை (PWD) உள்ளிட்ட தொழில்நுட்ப அமைப்புகளுடன் இணைந்து புவியியல் வரைபட ஆய்வும் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த சம்பவத்தில் ஆறு வாகனங்கள் சேதமடைந்துள்ளதைத் தொடர்ந்து எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்றாலும் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டுமென்று MPAJ அறிவுறுத்தியுள்ளது.



