
கோலாலம்பூர், பிப்ரவரி 3 – அம்பாங் அருகே உள்ள மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் உறுதி செய்துள்ளனர். முன்னதாக தொலைவில் இருந்து தீ கதிர்கள் உயர்ந்து காணப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
இந்த தீ விபத்து, அம்பாங் Taman Tun Abdul Razak பகுதியில் உள்ள Menara Indah குடியிருப்பு வளாகத்துக்கு அருகிலுள்ள மலை உச்சியில் ஏற்பட்டதாக அறியப்படுகின்றது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நேற்று இரவு அவசர அழைப்பு கிடைத்ததையடுத்து, அம்பாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு தீயணைப்பு வாகனம் உடனடியாக அனுப்பப்பட்டதென்று மூத்த தீயணைப்பு அதிகாரி Narmi B Othman கூறியுள்ளார்.
தீயணைப்பு வாகனம் வெறும் ஆறு நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்ததெனவும், தீ ஏற்பட்ட பகுதி அடர்ந்த காடும், செல்லும் பாதை இல்லாத மலை உச்சிப் பகுதியாகவும் இருந்ததால், தீயணைப்பு நடவடிக்கையில் சிரமம் ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது தீ விபத்து முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதுவரை தீ பரவவில்லை என்றும் கூறப்பட்டது. நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் தயார் நிலையில் உள்ளனர்.
இந்தத் தீ விபத்தில் உயிரிழப்புகளும் தீக்காயங்களும் எதுவும் பதிவாகவில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



