
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-25 – அரசாங்க உதவிகள் இனத்தின் அடிப்படையில் அல்ல, தேவையின் அடிப்படையிலேயே ஒதுக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மேலவையில் இன்று 13-ஆவது மலேசியத் திட்ட அறிக்கையை தாக்கல் செய்த அன்வார், மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், சபா மற்றும் சரவாக்கின் பூமிபுத்ரா, ஓராங் அஸ்லி பூர்வக் குடியினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இளைஞர்கள் உட்பட அனைத்து குழுக்களும் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப பயனடைவதை உறுதிச் செய்வதில் மடானி அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றார்.
எனவே, இந்த விஷயத்தை இன ரீதியான சர்ச்சையாக மாற்றுவதற்கு எதிராக எச்சரித்த அவர், அனைத்து சமூகங்களும் மடானி அரசின் கீழ் பயனடையும் என சொன்னார்.
“இந்தியச் சமூகத்தில் உள்ள ஏழைகளுக்கு, இந்த நாட்டில் பெரும்பான்மையான ஏழைகளாக இருக்கும் மலாய்க்காரர்களிடையே உள்ள ஏழைகளுக்கு உதவுவது போலவே உதவி வழங்கப்படுகிறது” என அவர் குறிப்பிட்டார்.
எனவே, ஓரினத்திற்கு கிடைக்கிறது, மற்றவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் எனக் கூறி பிரிவினையைத் தூண்டுவது தவறு; அது ஒரு தவறான கருத்தை உருவாக்கி விடுமென்றார் அவர்.
பூமிபுத்ரா தொழில்முனைவோருக்கான நிதி உத்தரவாதத் திட்டங்கள், சீன சமூகத்திற்கான SME ஆதரவு மற்றும் இந்தியச் சமூகத்திற்கான இலக்கு வைக்கப்பட்ட வீட்டுவசதி மற்றும் நிதியுதவி ஆகியவற்றை அன்வார் மேற்கோள் காட்டினார்.
STR எனப்படும் ரஹ்மா ரொக்க உதவி மற்றும் SARA என்றழைக்கப்படும் ரஹ்மா அடிப்படை உதவிகள் வாயிலாக இந்தியச் சமூகம் 972 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றுள்ளது; அதே சமயம் SJKP எனப்படும் வீட்டுக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் 2.5 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அச்சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.