
தமிழகம், ஜூலை.07 – தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷின் ‘ரசிகர்கள் நற்பணி இயக்கம்’ புதிய கொடி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. அது அவர் தமிழக அரசியலில் கால் பதிக்கிறாரா என்ற பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களைக் கொண்ட அக்கொடியின் மையப் பகுதியில், தனுஷ் கைகளை கூப்பி வணக்கம் செலுத்துவது போன்ற உருவமும், அதன் அருகே பிரகாசமான ஒரு சிவப்பு நிற நட்சத்திரமும் இடம் பெற்றுள்ளது.
கொடியில் உள்ள நட்சத்திரம் தனுஷின் 24 ஆண்டு கால கலைப் பயண வெற்றியைக் குறிப்பதாக ரசிகர்கள் கூறினாலும், அரசியல் பார்வையாளர்களோ இது ஒரு புரட்சிகர அரசியல் அடையாளம் என்கின்றனர். அதோடு, கொடியில் உள்ள “எண்ணம் போல் வாழ்க்கை” என்ற வாசகம் அவரது அரசியல் வருகைக்கான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் விஜய் கட்சி தொடங்கி, குறுகிய காலத்திலேயே ஆட்சியைப் பிடித்து முதலமைச்சரானதைத் தொடர்ந்து, பல நடிகர்கள் அரசியலை நோக்கி நகர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது தனுஷும் இணைந்து விட்டாரோ என்ற எண்ணம் எழுந்துள்ளது.
இருப்பினும், புதிய கட்சி தொடங்குவது குறித்து தனுஷ் இன்னும் எந்த விவரமும் வெளியிடவில்லை. இந்த நற்பணி மன்றக் கொடி விவகாரம் கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது.



