
புத்ராஜெயா, அக்டோபர்-29,
கோலாலம்பூரில் நடைபெற்று முடிந்த 47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு குறித்த பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்களின் குற்றச்சாட்டுகள் ‘அடிப்படையில்லாததும் பொறுப்பில்லாததும்’ ஆகும்.
பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாலிஹா முஸ்தாஃபாவின் அரசியல் செயலாளர் சிவமலர் கணபதி அவ்வாறு கடுமையாகச் சாடியுள்ளார்.
பெரிக்காத்தான் தலைவர்களின் கருத்துகள் அனைத்துலக இராஜதந்திர நெறிகள் பற்றிய அவர்களின் அறியாமையையும் குறுகிய அரசியல் நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் உட்பட எந்த நாட்டின் தலைவர் வந்தாலும், அவர்களுக்கு அடிபணிவதாகவோ அல்லது அவர்களின் கொள்கைகளுக்கு இணங்குவதாகவோ அர்த்தமில்லை; மாறாக, முதிர்ச்சியாகவும் கொண்ட கொள்கைத் தவறாமலும் கலந்துரையாடும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மலேசியாவின் தன்னம்பிக்கைமிக்க தலைமையைக் காட்டுகிறது.
இந்நிலையில், ‘பிரதமர் நடனமாடினார்’ எனக் கூறி சமூக ஊடகங்களில் வைரலாக்கப்பட்ட வீடியோ குறித்து பேசிய சிவமலர், அது மலேசிய பண்பாட்டு நட்புறவையும் விருந்தோம்பலையும் வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வின் பகுதியே தவிர, எதிர்க்கட்சிகள் கூறுவது போல “வெட்கக்கேடான செயல்” அல்ல எனத் தெளிவுப்படுத்தினார்.
உண்மையில் ஆசியான் மாநாடு மலேசியாவின் பொருளாதார வலிமையையும் போட்டித்திறனையும் உயர்த்தியுள்ளது; எனவே மலேசியா அதன் இறையாண்மையை இழந்துவிட்டதாகக் கூறுவது எதிர்கட்சியினரின் அரசியல் தூண்டுதல் மட்டுமே என அவர் சுட்டிக்காட்டினார்.
மலேசியாவின் குரலுக்கு உலக அரங்கில் மதிப்பும் மரியாதையும் கிடைப்பதை அரசாங்கம் தொடர்ந்து உறுதிச் செய்யும்.
ஆகவே, எதிர்கட்சிகள் நாட்டு மரியாதையை குலைக்கும் பொய்யான அரசியலை நிறுத்த வேண்டும் என, சிவமலர் தனதறிக்கையில் தெரிவித்தார்.



