
புதுடில்லி, ஜூலை 9 – நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அந்த ஏவுகளை கடற்படையில் இணைக்கப்படவுள்ளது.
இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் கவரர்த்தி ( Kavaratti ) போர்க் கப்பலில் இருந்து 17 முறை நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
இந்தியாவின் பாதுகாப்புத்துறையை மேம்படுத்தும் வகையில் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ஏற்பாட்டில் புதிய ஆயுதங்களை சோதனை செய்து பாதுகாப்பு படையில் இணைக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்தது.
ஜூன் 23 ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதிவரை இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெற்றிக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், கடற்படை மற்றும் இந்த சோதனையில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுக்களை தெரிவித்தும் கொண்டார். கடற்படையில் இந்தியாவின் தாக்குதல் ஆற்றலை இது மேலும் மேம்படுத்தும் என அவர் கூறினார்.