இந்தோனீசியப் பிரஜை சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஜகார்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகத்தில் முட்டை வீச்சு

ஜகார்த்தா, பிப்ரவரி-1 – இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகத்தின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் முட்டைகளை வீசியுள்ளனர்.
பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 100 பேர் வியாழக்கிழமை அப்போராட்டத்தில் இறங்கினர்.
சிலாங்கூர், பந்திங் அருகே உள்ள தஞ்சோங் ரூ கரையோரப் பகுதியில் இந்தோனேசியப் பிரஜைகளை உட்படுத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அப்போராட்டம் நடத்தப்பட்டது.
அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த வேளை, 4 பேர் காயமடைந்தனர்.
“இந்தோனேசியத் தொழிலாளரை சுட்டுக் கொன்ற மலேசியப் போலீசாரைக் கைதுச் செய்து சிறையில் அடையுங்கள்” என்ற கோரிக்கைத் தாங்கிய பதாகைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்திச் சென்றனர்.
இவ்வேளையில், அச்சம்பவம் தொடர்பில் மலேசிய அரசாங்கம் விரிவான, வெளிப்படையான விசாரணையை நடத்துமென பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதமளித்துள்ளார்.
அதே சமயம், ஜாகார்த்தாவில் நடைபெற்ற போராட்டத்திற்கு பதிலடி என்ற பெயரில் விரும்பத்தகாத காரியங்களில் இறங்க வேண்டாமென அவர் மலேசியர்களைக் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக அச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த இந்தோனீசிய அதிபர் பிராபோவோ சுபியாந்தோ, மலேசியா விரிவான விசாரணை நடத்தி என்ன நடந்தது என்பதை கண்டறிய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டிருந்தார்.
கள்ளக் குடியேறிகள் என நம்பப்படும் அந்த 5 இந்தோனீசியர்களும் ஜனவரி 24-ஆம் தேதி மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்ற போது, கடல் மார்க்க அமுலாக்கத் தரப்பு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது.