
ஜோகூர், பிப்ரவரி 23 -மலேசிய சிங்கப்பூர் இரண்டாம் இணைப்பில் உள்ள சுல்தான் அபூ பாக்கார் (Sultan Abu Bakar) வளாகத்தின் குடிநுழைவு, சுங்க மற்றும் பாதுகாப்பு சோதனை மையமான ICQS-இல் அமைந்திருக்கும் குடிநுழைவு தடுப்பைக் மோதி உடைத்து சிங்கப்பூர் நோக்கி தப்பிச் சென்ற கார் ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட அந்தக் கார் லாரிகளுக்கான கனரக வாகனப் பாதையில் நுழைந்ததும், பணியில் இருந்த உதவி காவலர்கள் தடுக்க முயன்றபோதும், ஓட்டுநர் திடீரென வேகமாக முன்னேறிச் செல்லும் காட்சியை சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியில் காண முடிந்தது.
ஓட்டுநரிடம் சரியான கார் பாதைக்கு திரும்புமாறு கூறப்பட்டபோதும் அவர் ஒத்துழைக்காமல், குடிநுழைவுத் தடுப்பைக் மோதி உடைத்ததுடன் நான்கு போக்குவரத்து கோன்களையும் இடித்துக்கொண்டு சிங்கப்பூர் வெளியேறும் வழி நோக்கி தப்பிச் சென்றார்.
இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 5,000 முதல் 15,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படும்.
சந்தேக நபரை கண்டுபிடிக்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், சமூக ஊடகங்களில் சிலர், அந்த மலேசிய பதிவு கொண்ட கார் ஓட்டுநர் சிங்கப்பூரின் துவாஸ் சோதனைச் சாவடியில் தடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.



