
கோலாலம்பூர், ஜூலை-4 – 13-ஆவது மலேசியத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட ஏதுவாக, 8 அம்சங்களைக் கொண்ட பரிந்துரைகளை ம.இ.கா அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது.
அப்பரிந்துரைகள் பல முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளதாக, தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், பெண்களின் கரங்களை வலுப்படுத்துதல்,
பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துதல் ஆகியவை அவற்றில் முக்கியமானதாகும்.
தவிர, பாலர் பள்ளி கல்விக்கு முன்னுரிமை அளித்தல், சமய விவகாரங்களை விவேகமாகக் கையாளுதல், சமூகத்திற்கே உரித்தான பிரத்யேகத் திட்டங்களை அமுல்படுத்துதல் ஆகியவற்றையும் கட்சி பரிந்துரை செய்துள்ளது.
இவை அனைத்தும் இந்தியச் சமூகத்தின் பிரச்னைகளை, இலக்கிடப்பட்ட அணுகுமுறையின் கீழ் தீர்க்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன;
பாரம்பரிய முறைகள் இனியும் போதாது என, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
அத்துடன், 2030-ல் மலேசியா ஒரு வயதான சமூகமாக மாறவுள்ளதால், முதியோரின் நலனுக்கான விரிவான கொள்கைகள் தேவைப்படும் என்றார் அவர்.
அதே சமயம், இளைஞர்களும் AI, ரோபோட்டிக்ஸ் போன்ற எதிர்கால தொழில்களுக்கான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்; தொழில்நுட்பமும் மென்மையான திறன்களும் கொண்டவர்களையே இன்றைய முதலாளிமார்கள் குறிவைப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 13-ஆவது மலேசியத் திட்டம், வரும் ஜூலை 31-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.