
கொழும்பு, ஜூலை.07 – இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு வடக்கே உள்ள நெகோம்போ சிறையில் வன்முறை வெடித்ததில் குறைந்தது 26 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நீண்ட காலமாக சிறைத்தண்டனை அனுபவிப்பவர்கள், தற்காலிகக் காவலில் உள்ளவர்கள் என இரு கைதிகள் குழுக்கள் இடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் இரு கைதிகள் கொல்லப்பட்டனர். நேற்று திங்கட்கிழமை மோதல் கடுமையாகி ஆறு சிறை அதிகாரிகள் உட்பட 24 பேர் பலியானதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கைதிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்ட போது மோதல் வெடித்ததாக சிறைச்சாலைத் துறையின் ஊடகப் பேச்சாளர் கூறினார். போதைப்பொருள் கடத்தல் விவகாரமே வன்முறைக்குக் காரணம் என நம்பப்படுகிறது. இருப்பினும், அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே நெகோம்போ மருத்துவமனைக்குச் சடலங்களும் காயமடைந்தவர்களும் கொண்டு வரப்பட்டதாக அம்மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்தார். சிலருக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள், வெட்டுக் காயங்கள் மற்றும் கடுமையான சிராய்ப்புகள் இருந்தன. இதில் படுகாயமடைந்த சிலரை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றியுள்ளதாக அவர் கூறினார்.
இலங்கை வரலாற்றில் கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த மோசமானச் சம்பவமாகக் கருத்தப்படும் அவ்வன்முறையை அடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை விமானப்படை சிறைச்சாலையைக் கண்காணிக்க ஒரு ஹெலிகாப்டரையும் பல ட்ரோன்களையும் அனுப்பியுள்ளது.



