
ஈப்போ, ஜூன்–11 – பேராக், ஈப்போ மேரு ராயாவில் சாலையோர ‘நாசி பட்ஜெட்’ அங்காடி உணவுக் கடையில் புகுந்து பணப்பெட்டி மற்றும் கைப்பேசியைத் திருடிச் சென்ற இரு உடன்பிறந்த சகோதரர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பான வீடியோ முன்னதாக வைரலாகி, பொது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
மே 21-ஆம் தேதி, கடை உரிமையாளரான 21 வயது பெண் விற்பனையில் மும்முரமாக இருந்தபோது வாடிக்கையாளர்கள் போல வந்த 36, மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்கள், திடீரென அங்கிருந்த iPhone மற்றும் பணப்பெட்டியைப் பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ஈப்போ மாவட்ட போலீஸார், கடந்த திங்கட்கிழமை இருவரையும் தெலுக் இந்தானில் அதிரடியாகக் கைதுச் செய்தனர்.
இருவரும் ஈப்போவில் நடந்துள்ள வேறு சில குற்றச் சம்பவங்களிலும் தங்களுக்குத் தொடர்பு இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
விசாரணைக்காக அவர்கள் நாளை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



