உத்தர பிரதேசத்தில் பிரசவ வலியை தாங்க முடியாமல் வயிற்றை கத்தியால் கிழித்த கர்ப்பிணி

உத்தர பிரதேசம், பிப்ரவரி 21 – உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்த 35 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவர், கடுமையான பிரசவ வலியை தாங்க முடியாமல் சமையல் கத்தியால் தனது வயிற்றை கிழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் சுகப்பிரசவம் முறையில் ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றுள்ளார்.
ஆனால் பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவர்கள் பரிசோதித்தபோது ஆழமான வயிற்றுக் காயம், குடல் வெளிப்பாடு மற்றும் அதிக ரத்த இழப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அப்பெண்ணை மற்றொரு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
அவரது கணவர் ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்த நிலையில், அவர் தனியாக வசித்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். சம்பவம் குறித்து மேல் விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



