
கோலாலாம்பூர், நவம்பர்-3,
2025 இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் டிஜிட்டல் தள உரிமத்திற்கு உட்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக, தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்கள் ஆதரவுத் திரட்டி வருவதை அரசாங்கம் அம்பலப்படுத்தியுள்ளது.
அரசாங்கத்திடம் எப்படியாவது பேசி அவ்விதிமுறையிலிருந்து தப்பி விட அவை படாத பாடுபடுகின்றன; நாடாளுமன்றம் வரை அவர்கள் பின் தொடருவதாக, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் மக்களவையில் கூறினார்.
ஆனால், அவை எவ்வளவுப் பெரிய நிறுவனங்களாக இருந்தாலும் அவற்றின் அழுத்தத்திற்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது என, அவர் திட்டவட்டமாக சொன்னார்.
பயனர்கள் குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்புக்காக இந்நாட்டின் சட்டத்திட்டங்களை அவை மதித்தே ஆக வேண்டுமென்றார் அவர்.
ரோப்லோக்ஸ் இணைய விளையாட்டில் புள்ளிகளை இழந்த பிறகு ஒரு சிறுவன் தனது 6 வயது தம்பியை கத்தியால் காயப்படுத்தியது உள்ளிட்ட அண்மைய சில சம்பவங்களே, இணையத் தள ஒழுங்குமுறையின் அவசியத்திற்கான சான்றாகும் என அவர் சொன்னார்.
இந்தச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பாக, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC தற்போது 10 துணைக் கருவிகளை மதிப்பாய்வு செய்து வருகிறது.
இது விரைவில் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஃபாஹ்மி சொன்னார்.
				
					
					


