
குயித்தோ (இக்குவாடோர்), நவம்பர்-8 – தென்னமரிக்க நாடான இக்குவாடோரில் எங்கிருந்தோ வந்த துப்பாக்கி தோட்டா பாய்ந்ததில், வீட்டிலிருந்த இளம் கால்பந்து வீரர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உள்ளூர் கிளப்பொன்றின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய 16 வயது மிகுவேல் நாசாரேனோ (Miguel Nazareno) சூடு பட்டு வீட்டிலேயே சரிந்து விழுந்தார்.
அப்பகுதியில் நிகழ்ந்த அனாமதேய துப்பாக்கிச் சூட்டுக்கு அப்பையன் பலியாகியுள்ளது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாண்டு மட்டும் இக்குவாடோரில் இது போன்ற துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான நான்காவது கால்பந்து வீரர் நாசாரேனோ என்பது குறிப்பிடத்தக்கது.
2021-ஆம் ஆண்டிலிருந்து
அந்நாட்டில் வன்முறை மற்றும் குற்றச்செயல் சம்பவங்கள் தலைத்தூக்கியுள்ளன.
கொலம்பியா, மெக்சிகோ நாடுகளைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு வைத்துள்ள குண்டர் கும்பல்களின் அட்டகாசமே, அதற்கு முக்கியக் காரணமாகும்.
இதனால், உயிருக்கு உத்தரவாதம் இல்லையே என்ற கவலையிலும் பெரும் அச்சத்திலும் இக்குவாடோர் நாட்டு மக்கள் நாட்களைக் கடத்தி வருகின்றனர்.



