
கோலாலம்பூர், நவம்பர்-9,
பிரதமரைப் பற்றி உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கியதற்காக, MAP எனப்படும் மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான பி. வேதமூர்த்தி, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுள்ளார்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அன்வார் சம்பந்தப்பட்ட வழக்கில், முன்னாள் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் (Tengku Maimun Tuan Mat) சம்பந்தப்பட்டிருந்ததாகவும், அதனை மனதில் வைத்தே தெங்கு மைமுனின் சேவையை பிரதமர் நீட்டிக்கவில்லை என்றும் வேதமூர்த்தி முன்னதாகக் கூறியிருந்தார்
எனினும் நேற்று காலை அதிகாரப்பூர்வ நீதித்துறை பதிவுகளை மதிப்பாய்வு செய்த பிறகு, அன்வாரின் எந்தவொரு மேல்முறையீட்டு வழக்குகளிலும் தெங்கு மைமுன் ஒருபோதும் சம்பந்தப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அதனை மதித்து, தனது தவறை ஒப்புக்கொண்ட வேதமூர்த்தி, குழப்பம் ஏற்படுத்தியதற்காக, தனது சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் வருத்தம் தெரிவித்தார்.
தனது முந்தைய அறிக்கையால் பாதிக்கப்பட்ட தெங்கு மைமுன் மற்றும் பிறரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக வேதமூர்த்தி சொன்னார்.
எனவே, தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க, தனது பேச்சை வீடியோவைப் பதிவு செய்த அல்லது பகிர்ந்த எவரும் சம்பந்தப்பட்ட பகுதிகளை நீக்கிவிடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.



