
குவாந்தான், நவம்பர்-7, கட்டுமானத் தொழிலாளியைத் தாக்கியதாக பஹாங் சுல்தானின் இளைய சகோதரர் தெங்கு மூடா தெங்கு அப்துல் ரஹ்மானின் புதல்வர், இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
44 வயது அலியாஸ் அவாங் (Alias Awang) என்பவரைத் தாக்கியதாக 20 வயது தெங்கு எடி அகாஷா (Tengku Eddie Akasya) மற்றும் இதர நால்வர் மீது, குவாந்தான் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
அந்த இதர நால்வரில் ஒருவர் போலீஸ் அதிகாரி என்றும் கூறப்படுகிறது.
ஜூன் 6-ஆம் தேதி குவாந்தான், ஜாலான் தெலுக் சிசேக்கில் அலியாஸை காயப்படுத்தும் நோக்கில் அவரின் வலது தொடையில் கத்தியால் குத்தியதாக அவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர்.
எனினும் ஐவரும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரினர்.
இதையடுத்து தலா 7,000 ரிங்கிட் தொகையில் அவர்களை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.
டிசம்பர் 11-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென்றும் நீதிபதி அறிவித்தார்.
அரச குடும்பத்துடன் தொடர்புடைய ஒருவரிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்து சம்பவ இடத்திற்கு போன போது, சுமார் 20 பேர் தன்னைத் தாக்கியதாக, ஜூன் 8-ஆம் தேதி செய்திருந்த போலீஸ் புகாரில் அலியாஸ் கூறினார்.
அரச குடும்ப வாரிசு ஒருவன் தனது காலை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில், அதிர்ஷவசமாக குறி தப்பியது; ஆனால் தொடையில் கத்தியால் குத்தி விட்டனர் என அப்புகாரில் அலியாஸ் தெரிவித்திருந்தார்.