
கோலாலம்பூர், ஜன 31 – பாலிங் கோலாக்கெட்டிலுக்கு (Kuala Ketil) அருகேயுள்ள கத்தும்பா (Katumba ) தோட்டத் தமிழ்ப்பள்ளி பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்திருக்கிறார்.
அந்த தமிழ்ப்பள்ளி எதிர்நோக்கியிருக்கும் சிக்கலை தாம் அறிந்திருப்பதோடு அது குறித்து விரிவாக ஆராய்ந்து வருவதாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.
மாணவர்களின் கல்வி மட்டும் அல்ல, அவர்களின் பாதுகாப்புக்கும் நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கோபிந் சிங் தெரிவித்தார்.
கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி, 2023 ஆம் ஆண்டு தாவார் தேசிய பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பட்டது.
கடந்த ஒரு ஆண்டு காலமாக தாவார் தேசியப் பள்ளியில் இந்தத் தமிழ்ப்பள்ளி இயங்கிவந்தது.
மிக விரைவில் தேசியப் பள்ளி மறுசீரமைக்கப்படும் என்பதால், கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய பள்ளி வளாகத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழல் இப்போது ஏற்பட்டிருக்கிறது.
இந்தப் பிரச்சனை குறித்து தன்னிடம் தெரிவிக்கப்பட்டதோடு பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வித் தேவையை முன்னிறுத்தி சரியான தீர்வு காணப்பட வேண்டும்.
மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை இந்தப் பிரச்சனையால் தடைபட்டுவிடக்கூடாது. அதே வேளையில் அவர்களின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண தாம் கல்வியமைச்சை உடனடியாக தொடர்புகொண்டு பேசியிருப்பதோடு விரைவில் இந்தப் பள்ளிக்குத் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதுதான் தனது நோக்கம் என்றும் கோபிந்த் சிங் தெரிவித்தார்.