
ஆயர் ஈத்தாம், ஜனவரி-25 – பினாங்கில் நீண்டகால கனவு ஒருவழியாக நனவாகியுள்ளது.
10 ஆண்டுகளுக்கும் மேலான சவால்கள் மற்றும் தடைகளைத் தாண்டி, ஆயர் ஈத்தாமில் உள்ள ராஜாஜி தமிழ்ப் பள்ளியின் மறுகட்டுமானம் தொடங்கியுள்ளது.

புதியப் பள்ளி வளாகத்தின் பூமி பூஜை பினாங்கு முதல்வர் சோ கோன் இயோ (Chow Kon Yeow) தலைமையில் நேற்று நடைபெற்றது.

ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜு, புக்கிட் கெளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர், பினாங்கு மாநகர மேயர் டத்தோ இஞ்சினியர் ராஜேந்திரன், செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் உள்ளிட்ட பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர்.

பினாங்குத் தமிழ் பள்ளிகள் மீதான சிறப்பு செயற்குழுவின் தலைவருமான சுந்தராஜு, நீண்ட நாள் கனவு நனவானது குறித்து பெருமையும் நன்றியும் தெரிவித்தார்.

2022‑ல் பினாங்கு அரசு 2.6 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது.
மேலும், IDEAL Group தனது CSR முயற்சியின் கீழ் பள்ளியை இலவசமாக கட்ட ஒப்புக் கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்த இரண்டு ஆண்டுகளில், ராஜாஜி தமிழ்ப் பள்ளி ஒரு நவீன பள்ளியாக உருவெடுத்து, பாதுகாப்பான மற்றும் வசதியான கல்வி சூழலை வழங்கும்.
இது வெறும் கட்டட மேம்பாடு அல்ல, பினாங்கு தமிழ்க் கல்வி மீதான பினாங்கு அரசாங்கத்தின் உண்மையான அக்கறையின் அடையாளம் என சுந்தராஜு வருணித்தார்.


இவ்வேளையில், பள்ளி எதிர்கொண்ட சவால்கள் குறித்து தலைமையாசிரியர் Lueis பகிர்ந்துகொண்டார்.
மக்கள் அதிகமுள்ள இடங்களை நோக்கிய இது போன்ற இடமாற்றம், மாணவர் எண்ணிக்கைக் குறைவு பிரச்னைக்கு நல்ல தீர்வாகும் என, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக்கின் செயலாளர் தியாகராஜன் தெரிவித்தார்.
நீண்ட கால காத்திருப்பு நிறைவேறியிருப்பது குறித்து ராஜாஜி பள்ளி மேலாளர் வாரியத்தின் தலைவரும் பொருளாளரும் நெகிழ்ச்சி தெரிவித்தனர்.
ராஜாஜி தமிழ்ப் பள்ளியின் மறுநிர்மாணிப்பு, இந்த 2026-ஆம் ஆண்டில் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டில் நல்லதொரு தொடக்கமாக அமைந்துள்ளது.



