கரூர் சம்பவத்துக்கு விஜய் மட்டும் பொறுப்பல்ல, நாம் அனைவருமே காரணம்; அஜித் பேச்சு

சென்னை, நவம்பர்-1,
நடிகரும் அரசியல்வாதியுமான விஜயின் அரசியல் கூட்டத்தில் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவத்துக்கு, அவர் மட்டும் காரணமல்ல; மாறாக சமூகம் என்ற வகையில் நாம் அனைவருமே பொறுப்புதான் என, முன்னணி நடிகர் அஜித் குமார் கூறியுள்ளார்.
Front Row நிகழ்ச்சியில் அனுபமா சோப்ராவுடன் பேசிய அஜித், “கரூர் துயரத்துக்கு ‘அந்த ஒரே நபர்’ மட்டும் பொறுப்பல்ல… நாமெல்லாரும் பொறுப்பு” என கூறியது வைரலாகி வருகிறது.
“சமூகம் தற்போது பெரிய கூட்டங்கள், இரசிகர் கலாச்சாரம் ஆகியவற்றில் அளவுக்கு மீறி ஆர்வம் காட்டுகிறது; இது முழு திரைப்படத் துறையின் முகத்தையே கெடுக்கிறது” என்றார் அவர்.
எனவே, இத்தகைய நிகழ்வுகளில் தவறு ஒருவருக்கே அல்ல — இரசிகர்கள், அமைப்பாளர்கள், ஊடகம், மற்றும் பிரபலங்களும் பொறுப்பேற்க வேண்டும் என அஜித் குறிப்பிட்டார்.
செப்டம்பர் கடைசியில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் நடத்தியப் பிரச்சாரக் கூட்டத்தில் நிகழ்ந்த அத்துயரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அதோடு, கூட்டக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் அது எழுப்பியது.
இந்நிலையில் அஜித் குமாரின் இப்பேச்சு, பொது மக்கள் மற்றும் திரையுலகத்தில் பொறுப்புணர்வு குறித்து சிந்திக்க வைக்கும் வகையில் இருப்பதாக பரவலாக பாராட்டப்படுகிறது.



